முதல் சிறுகதை - இளங்காவல்

அந்த இரவு ஒரு அழகிய அமாவாசை கிழவூரின் ஜமின்தார், மாயன் சேர்வராயனுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் கழித்து இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர், வெகுச் சிறப்பாக காளியம்மனுக்கு அமாவாசை பூஜை நடைபெற்றது. களத்துக் காவல் செய்யும் அனைத்து ஆண்களும், ஊர் பொதுமக்களும் அந்த இரவை பருகிக்கொண்டு ஜமின் தாருக்கு வாரிசு உண்டானதை திருவிழா போல் மகிழ்ந்து கொண்டாடினர். பச்சரிசி சோரும், காயடிக்கப்படாத கெடாய் கறியும் கோவிலின் வெளிப்புற திண்ணையில் வாழை இலையில் பந்தத் தீ வெளிச்சத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஊரின் எல்லையில் களத்து மேட்டில் குமித்து வைக்கப்பட்டிருந்த புதிய நெல்லின் மணம் கருத்த பாண்டிக்கு போதை ஏற்றியது, நேரமாகியும் இன்னும் ஒருவரும் காவலுக்கு வரவில்லையே என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் கருத்த பாண்டி. கருத்தபாண்டி இருபத்திரண்டு வயதான இளம் இளைஞன், காவலுக்கு வந்து பழக்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆகின்றது. புதிய தொழில் ஆர்வத்தில் தனியாக, முதலாவதாக இருளப்பசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட பதினாறு ஏக்கரில் அறுவடை செய்து குவிக்கப்பட்ட நெல்லுக்கு காவலாக வந்துள்ளான். மேலக்காட்டில் இருந்து சின்...