காளையார் கோவில் பயணம்

 காளையார் கோவில் பயணம்


       



காளையார் கோவில் முன்பு


            சிறு வயதிலேயே பொன்னியின் செல்வன் படித்ததால் சோழதேசம் மீதும் அந்தக் கதாபாத்திரங்கள் மீதும்  தீராத காதல் , கல்லூரிக் காலத்தில் ஒரு ஆசிரியை எனக்கு பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை அறிமுகம் செய்து வைத்தார் , நான் ஒரு கட்டிட பொறியாளன் என்பதாலோ என்னவோ பெரிய கோவிலின் மீது மிகப்பெரிய பட்று வந்தது உடையார் நாவலின் கடைசி  ஐம்பது பக்கங்களை கோவிலில் வைத்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு பாகங்களை உடைய உடையார் நாவல் 3600 பக்கங்கள் கொண்டது .


       புத்தகங்களின் வழியே உலகத்தை ரசிக்கும் வாசகன் நான் ,என்னைப் பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்ற என் நண்பர்களுக்கு இந்நேரம் நன்றி கூறிக் கொள்கிறேன் , உடையார் நாவலை அறிமுகம் செய்த ஆசிரியைக்கும் இந்நேரம் நன்றியைக் கூறிக் கொள்கிறேன் . என்னுடைய பெரிய கோவில் பயணத்தையும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத்தால் விவரிக்க என்னால் இயலாது.

     தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்குள் செல்லும் போது எனக்கு எந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டதோ அதே அனுபவம் சிவகங்கை காளையார் கோவிலுக்கு செல்லும்போதும் ஏற்பட்டது காரணம் மருது சகோதரர்களைப் பற்றி மிகச் சில இடங்களில் மட்டுமே படித்திருக்கிறேன் ,  அவர்கள் மீது பெரிய மரியாதை உண்டு .

ராஜராஜ சோழனுக்கும் மருது சகோதரர்களுக்கும் ஓரிடத்தில் ஒத்துப்போகிறது , பெரிய கோவிலை கட்டுவதற்கு ராஜராஜசோழன் எந்த அளவுக்கு காதல் கொண்டான் என்பதை உடையார் நாவல் முழுக்க கூறியிருக்கிறார் பாலகுமாரன் . அதேபோல் மருது சகோதரர்களின் இறுதி நாட்களை நினைத்துப் பாருங்கள் தான் கட்டிய கோவிலின் கோபுரத்தை விட என் உயிர் பெரிதல்ல என்று எண்ணி இரண்டு சகோதரர்களும் சரணடைந்து மாண்டனர் . தன் உயிர்களைக் கொடுத்து கோவிலை சேதப்படுத்துவதிலிருந்து காத்தனர் அந்த மாவீரர்கள். 

  வெகு நாட்களாக ஆசைப்பட்ட காளையார்கோவில் பயணத்தை சிறப்பாக செய்து தந்த அன்பு மாமாவுக்கு இந்நேரம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .


       கோவிலின் கோபுர வாயிலை பார்த்து மிரண்டு போய் நின்றேன் , வாசலில் இருந்த சின்ன மருதுவின் மகன் முத்துவடுகநாத துறையின் சிலையைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது , அந்தச் சிலையை கட்டிப்பிடித்து அணைக்க நினைத்தேன் .எதற்காக இந்த உணர்ச்சிகள் என இந்தக் கட்டுரையை தாங்கள் முடிக்கும்போது  புரியும் ஏன் உங்களுக்கும் கூட கண்ணீர் வரலாம் ,

      

முத்துவடுகநாத பெரிய உடையார்த் தேவர்


மகுது சகோதரர்கள் குறித்து கர்னல் வெல்ஷ், 'ராணுவ நிளைவுக் குறிப்புகள்" என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர். மருது சகோதரர்களுடன் நெருங்கிப் பழகியவர் அவரது நினைவுகளில் வெளிப்படும் பெரிய மருது மற்றும் சின்ன மருதுவைப் பற்றிய சித்திரங்கள் அபாரமானவை, மருது சகோதரர்களைப் பற்றி வெல்ஷ் மிகவும் வியந்து சொல்கிறார்.


பெரிய மருதை பொதுமக்கள் வெள்ளை மருது என்றே அழைத்து இருக்கிறார்கள். பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல்வலிமை கொண்ட பெரிய மருது, நாணயத்தை விரல்களால் வளைக்கக்கூடிய வலிமை கொண்டவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர், புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது, தேர்ந்த திறமைசாலி. அவரது தலையசைப்பை மக்கள் சட்டமாக மதித்தனர். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூட கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம். வெளியே வரலாம். அன்போடும் பண்போடும் பேசிப் பழகக்கூடியவர்.


'மருதுகளிடம் இருந்துதான் வேல் வீசவும், களரி சுற்றவும் கற்றுக்கொண்டேன்' என்று கூறும் வெல்ஷ், போரின் முடிவில் மருது ஒரு மிருகத்தைப் போல வேட்டை ஆடப்பட்டதையும், தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவானியைப் போலத் தூக்கில் இடப்பட்டதையும் மன வருத்தத்தோடு பதிவு செய்து இருக்கிறார்.


வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசிமகன் துரைச்சாமி, பினாங்குக்கு நாடு கடத்தப் பட்டார். அப்போது அவருக்கு வயது 15. துரைச்சாமியின் இயற் பெயர் முத்து வடுகநாத துரை என்கிறது சிவகங்கை அம்மானை நூல், சின்ன மருதுவோடு மிகுந்த நட்பாகப் பழகிய வெல்ஷ், தன்னை அவர் மிகவும் அன்போடு நடத்தியதோடு, ஒவ்வொரு முறையும் தனக்காகத் தனிச் சுவைமிக்க ஆரஞ்சுப் பழங்களைக் கூடை கூடையாகப் பரிசு தருவது வழக்கம் என்று தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.


கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, தப்பிச் சென்ற ஊமைத் துரைக்கு அடைக்கலம் கொடுத்தார் என்று காரணம் காட்டி மருதுவோடு, ஆங்கிலே யர்கள் யுத்தம் செய்தார்கள். அதன் பின்னால் இருந்த ஆங்கிலேயர்களின் அழித்தொழிப்பு மனநிலையைப்பற்றி மருது சகோதரர்கள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் விரிவாகக் குறிப்பிடுகிறார். 


பாளையக்காரர் மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்துக்கு தீ வைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற்பார்வையில் விசாரணை ஏதும் நடத்தாமல் தூக்கிலிட ஆணை தரப்பட்டது. இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதம் இன்றி உடனே நிறைவேற்றப்பட்டன. மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர். 1801-ம் ஆண்டு விதியால் சிறைப்பிடிக்கப்பட்டனர் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் .


இரண்டு அல்லது மூன்று பேர்களாக ராணுவ மன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு, திருப்தியடையாத ஆங்கில அரசு, ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால், 1000 கூலிச் சக்கரங்கள் பரிசாக வழங்கப்படும் என்று, கர்னல் அக்னியூ 1801 அக்டோபர் 1-வ் சிவகங்கைலில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். ஆங்கிலேயர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி. மருதுவின் தளபதிகள் மற்றும் உடனிருந்த முக்கிய வீரர்கள் என 72 பேர், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு (இன்றைய பினாங்கு) நாடு சுடத்தப்பட்டனர்,

பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டவர்களின் கைகளில் விலங்கு பூட்டி, கை கால்களையும் இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும்போது சங்கிலிச் சத்தம் 'கிளிங் கிளிங்' எனக் கேட்டதால், அந்தக் கைதிகள் 'கிளிங்கர்கள்' என அழைக்கப்பட்டனர். நாளடைவில், அந்தப் பெயர் அங்கு குடியேறிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது. அத்தக் கைதிகளில் இருவருக்கு மட்டும் நடக்கக்கூட முடியாத அளவில் சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக் கை விலங்கில் தொங்கவிட்டு இருந்தனர். ஏனென்றால், அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். அதில் ஒருவர்... சின்ன மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி, மற்றவர், முக்கிய படைத் தளபதியான சேக் உசேள் என்ற இளைஞர்.

 இந்த சேக் உசேன்தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின்போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்குத் தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடக்கக்கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே இறந்தார்.


1802 பிப்ரவரி 11 ல் தளபதி வெல்ஷ், துரைச்சாமியை நாடு கடத்தி கப்பலில் அனுப்பிவிட முயன்ற தருணத்தைத் தனது நூலில் குறிப்பிடுகிறார். 'கைதிகளைக் கப்பலில் ஏற்றி அனுப்பும் பொறுப்பை நான் லெப்டினன்ட் ராக் ஹெப்டிடம் ஒப்படைத்த அந்த நாளை நான் என்றும் மறக்க முடியாது. தூத்துக்குடியில் இருந்த ராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன், கலகத்தில் ஈடுபட்டதாள், நாடு கடத்தல் தண்டனை விதிக்கப் பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டு இருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.


உரிய மரியாதையுடன் துரைச்சாமியை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், 17 வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் ஒடுங்கிய நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.


பினாங்கின் முதல் கவர்னராக இருந்த சர் பிரான்சிஸ் லைட்டின் மகளைத்தான் வெல்ஸ் திருமணம் செய்திருந்தார். கட்டபொம்மனை அழித்த மேஜர் பேௗர்மென், பினாங்கில் அதிகாரியாக இருந்தார். அவர் ஒரு கிறிஸ்துவ சபையைக் கட்டிக் கொண்டு இருந்தார். அந்த கட்டடப் பணிக்கு கைதிகள் அழைத்து வரப்பட்டார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவராக உடல் மெலிந்து ஓடுங்கிய நிலையில் இருந்தார் துரைச்சாமி. அந்த திருச்சபையைப் பார்வையிட வந்திருந்த வெல்ஸை சந்தித்த துரைச்சாமி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். வெள்ஸால் தன் முன்னே நிற்கும் மனிதனை நம்பவே முடியவில்லை. தனது நண்பன் சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியா இந்த நிலையில் இருக்கிறார் என நெகிழ்ந்துபோய் அவரோடு அன்பாகப் பேசியிருக்கிறார். தனது குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதித் தருவதாகச் சொன்ன துரைச்சாமி, அதை வெல்ஸ் எப்படியாவது சிவகங்கைக்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று கேட்கிறார். தனது பதவி மற்றும் ஆங்கில அரசின் கண்டிப்பு காரணமாக தன்னால் அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மறுத்த வெல்ஸ். பரிதவிப்போடு தன் முன்னே நின்ற துரைச்சாமியின் உருவம் தன் மனதின் சொல்ல முடியாத வேதனையை உருவாக்கியது. என்று எழுதி இருக்கிறார்.


மறவர் சீமையை ஆண்ட மன்னர்களின் மகன் கைதியாக ஒரு கடிதத்தைக்கூட அனுப்ப முடியாமல் கைவிடப்பட்டு நிற்கும் காட்சி வரலாற்றின் அழியாத துயரச் சித்திரமாகவே உள்ளது. அதன் பிறகு, துரைச்சாமி என்ன ஆனார் என்ற விவரங்கள் இன்று வரை கிடைக்கவில்லை.  


பெரிய மருது தூக்கிலிடப்படுவதன் முன்பாக தனது வாரிசுகளைப் பாதுகாத்து, சொத்துக்களைத் தர்ம காரியங்களுக்கு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று உருவிய கத்தி மீது சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறார். அக்னியூ துரையும் அப்படியே செய்வதாக சத்தியம் செய்திருக்கிறார். ஆனால், வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு துரைச்சாமி உட்பட 71 பேரை வாழ்நாள் முழுவதும் அயல் தேசத்தில் ஒடுங்கிக்கிடக்கும்படி செய்தது ஆங்கில அரசு.


1891 மே 18-ம் தேதி துரைச்சாமியின் மகன் மருது சேர்வைக்காரன் என்பவர், மதுரை ஆட்சி யாளரிடம் ஓய்வூதியம் கேட்டு அளித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். துரைச்சாமி பினாங்கில் இருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, ஆங்கிலேய அரசிடம் தனக்கான பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால், திடீரென துரைச்சாமி நோய்வாய்ப்பட்டு சிவகங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே காலமானார் என்று அவரது மகன் குறிப்பிடுகிறார். துரைச்சாமியின் வாழ்க்கையைப்பற்றி தகவல்கள் இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அவரது வாழ்வின் சில தருணங்களே நம் முன்னே வெளிச்சமிடப்பட்டு இருக்கின்றன. ஒரு கைதியாக அவர் என்னவிதமான இன்னல்களை அனுபவித்தார்... ஏன் அதை மௌனமாக ஏற்றுக்கொண்டார் .


15 வயதில் சிறைக்குப் போய் வயதாகி நோய்மை யுற்று வெளியே வந்து எந்த உரிமையும் இன்றி இறந்துபோன துரைச்சாமியின் வாழ்க்கை, சொல்லில் அடங்காத துயரம்கொண்டதாகவே இருக்கிறது. அந்த நினைவுகள் வெறும் வரலாற்றுத் தகவல்கள் அல்ல. ஆங்கிலேய அதிகாரம் எவ்வனவு ஒடுக்குமுறையானது என்பதன் அத்தாட்சி அது.


வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதையுண்டுபோன குரல்களைத் தேடிக் கண்டறிவதே உண்மையான வரலாற்று ஆய்வாளனின் வேலை துரைச்சாமி விஷயத்தில் அந்தப் பணி இன்னமும் பாக்கியிருக்கிறது. என்றே நோன்றுகிறது. துரைச்சாமிக்குக் கிடைத்த சிறிது வெளிச்சம்கூட அவரோடு சிறைப்பட்ட மற்ற 71 பேருக்கும் கிடைக்கவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? விடை இல்லாத கேள்விகள் கொப்பளிக்கின்றன.


சுதந்திரப் போராட்டம் என்பது இப்படி வெளியே தெரியாமல் போன எண்ணிக்கையற்ற மனிதர்களின் உயிர்த் தியாகத்தால் உருவானது என்பதை அறியும் போதுதான் சுதந்திரத்தின் உண்மையான மதிப்பை முழுமையாக உணர முடியும்.


கர்னல் வேல்ஸ் மற்றும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் க்கும் இதயம் கனிந்த நன்றிகள் .




தஞ்சையில்.

https://youtu.be/kyU29Cfzr80


Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்