குமரித்துறைவி- வாசிப்பு அனுபவம்
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஜோ.டி.குரூஸ் எழுதிய " ஆழி சூழ் உலகு " நாவலில் சில இடங்களில் மெய்சிலிர்த்தேன் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் ஆன தொடர்பை நினைத்து . மதம் மாறிய மீனவர்கள் மச்சான் சுவாமிக்கு ( முருகனுக்கு ) நடுக்கடலில் இருந்துகொண்டு திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்து தேங்காய் உடைக்கும் சடங்குகள் . திமிங்கலங்கள் படகை சூழ்ந்த போதும் குமரி அம்மன் காப்பாற்றுவாள் என எண்ணுவது. இரண்டு வரிகளில் உள்ள இரண்டு சம்பவங்கள் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது வாசிக்கும்போது அதுபோல் , " குமரித்துறைவி " நாவல் 200 பக்கங்களும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது .
சு வெங்கடேசன் எழுதிய " காவல் கோட்டம் " நாவலில் மீனாட்சி சிலை கடத்தப்பட்டு ஆரல்வாய்மொழியில் இருந்ததாக சிறு குறிப்பு இருந்தது அதை வாசிக்கும் போதே மனது திகிலடைந்தது .
மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாட முடியாதா என்ன ?
" குமரித்துறைவி" முழுக்க மீனாட்சியம்மன் மீது அனைத்து நாட்டு மக்களுக்கும் இருந்த உன்னதமான உறவையும் உணர்வுகளையும் சொல்லுகிறது .
'தென்குளம் கட்டலைக்காரன் வீரமார்த்தாண்டன் உதய செண்பகராமன் ' மொத்தக் கதையையும் தன் மன எண்ணங்கள் மூலம் நமக்கு காட்சிப்படுத்துகிறார் .
வழிப்பறி க்கு வந்த ' கயத்தாறு மறவன் சேடகரை கொண்டயத்தேவன் ' பல்லக்கில் சிலையாக இருந்த மீனாட்சியை மூன்று வயது குழந்தையாக கண்டு பரவசம் அடைந்து பல்லக்குத் தூக்கிகளுக்கு உதவி புரிவதும் அவன் வகையாராக்களே மீனாட்சி இருக்கும் இடத்திற்கு இடம் பெயர்வதும் உணர்ச்சிகரமானவை .
மகாராஜா , பெற்ற மகளைப் போல மீனாட்சியை நினைத்து அழுது உருகுவது நம்மையும் உலுக்குகிறது . மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது .
பெண்கள் உள்ள வீடுகளுக்கு மட்டுமே தெரியும் அவள் மணமாகி செல்வது அந்த குடும்பத்துக்கு எந்த ஒரு உணர்ச்சியை தரும் என்று . ஆனால் கனத்த மனதோடு மகாராஜா கூறுகிறார் மீனாட்சி திருமணம் ஆகி மதுரைக்குச் செல்ல இருப்பதை நினைத்து 'ஒரு ஸ்திரீ கிளம்பி போறது மகாமங்களம் குடும்பத்துக்கு.
எவ்வளவு திடமான மனது இருப்பினும் பெற்ற மகளை போல மீனாட்சி-க்கும் சுந்தரேஸ்வரருக்கும் (சிலைகளுக்கு) மணமுடித்து வைத்து மதுரைக்கு அனுப்பிய மறு கணமே துயரம் தாளாமல் உயிரை விடுகிறார் மகாராஜா .
அம்மை அணிகள் பூண்டு, “தன் செல்லக்குட்டி மகள்னு தோணிப் போட்டுதே” என்னும் வரிகள் அம்மையை ததும்பிய குழந்தை வடிவில் காணச் செய்தது. அவள் சிறு குழந்தை போல சிரிக்கிறாள். “எனக்கு அவள் அடங்காப் பிடாரி மகள், அப்பப்ப நல்ல நாலு வார்த்தை சொல்லி கண்டித்து வைப்பேன் அடம்புடிச்சா ஒரு ரெண்டு அடிபோடுறதும் உண்டு” என்று ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் சொல்லும் போது அம்மை சிரித்தும், உற்சாகமாக இருக்கிறாள் என தோன்றுகிறது.
" களவாணி சிறுக்கி நம்மகிட்டே விளையாடிருக்காடா...குறும்பியா இருந்தாலும் கனிவுள்ளவள் "என ஆரியன் நம்பூதிரி திட்டும் போது நமக்கு கண்ணீருடன் சேர்த்து சிரிப்பும் வருகிறது .
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் , மனிதர்களுக்கும் தெய்வங்களுக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தங்கள் தொடர்வது மனித மாண்பை தக்கவைக்கும் என நம்புகிறேன் .
இன்றும் அனைத்து கிராமங்களிலும் இது போன்ற தெய்வ வழிபாடுகள் சடங்குகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை கண்டு உணர்ந்து ஆராய்ந்து பகிர வேண்டும் .
ஒருவரின் ஆயுளில் நினைவறிய அறுபது எழுபது விழாக்களை பார்க்கமுடியும். வாழ்க்கை என்பதே அவ்வளவுதான். அதில் மகிழ்வுக்குரிய எந்த தருணமும் விடுதற்குரியவை அல்ல. சில்லறை ‘பகுத்தறிவு’, நம்மை ஒரு படி மேலாக எண்ணிக்கொள்ளும் பலவகை ஆணவங்கள் வழியாக சமூகத்தின் கூட்டுக்களியாட்டங்களை இழந்தால் உளச்சோர்வுக்கே செல்வோம்.
உலகியல்வாழ்க்கையில் செல்வம் ஈட்டுவதும் நுகர்வதும் முக்கியம்தான், ஆனால் அவற்றுக்கிணையானவை இத்தகைய களியாட்டுகளும். பழங்குடிச் சமூகங்கள் முதல் அதிநவீன சமூகங்கள் வரை அவை வெவ்வேறு வகையில் உள்ளன.
நாம் பல ஊர்களில் இவற்றை இழந்துகொண்டிருக்கிறோம். நகர்மயமாதல் ஒரு காரணம், நகரங்களில் வாழ்பவர்களுக்கு இவையெல்லாம் கிராமியத்தனமானவை, பிற்பட்டவை என்னும் எண்ணம் உள்ளது. பழைய ஊர்க்கட்டுப்பாடுகள் அழிந்துவிட்ட இடங்களில் திருவிழா என்றாலே குடிகாரர்களின் சலம்பல் என்றாகி மக்கள் விலகிச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மிதமிஞ்சிய வணிகமயமாக்கம் இன்னொரு அழிவு. இறுதியாக இந்தவகையான கொண்டாட்டங்களை அரசியலாக்குவது மிகப்பெரிய அழிவு. இவை ஒற்றுமைக்கானவை, அரசியல் பிளவுகளையும் சண்டைகளையுமே கொண்டுவரும். பல ஊர்களில் விழாக்கள் அரசியல் காரணமாக அடிதடியில் முடிந்து நின்றுவிட்டிருக்கின்றன.
இரண்டுநாட்கள் ஒரு தீவிரமான சிறு வாழ்க்கை. உச்சங்கள், கொண்டாட்டங்கள் மட்டுமே கொண்ட வாழ்க்கை , நல்ல முறையில் அனுபவிப்போமே ?
என் ஆசான் - களில் ஒருவர் , என்றும் என் சிந்தையில் திகழ்பவர் , என் சிந்தனைகளுக்கு மூல காரணமானவர் , ஜெயமோகனுக்கு நன்றி .
Comments
Post a Comment