லைப் ஆப் பை - வாசிப்பு அனுபவம்



சிலர் வருடத்திற்கு ஒருமுறை பிடித்த இடத்திற்கோ பிடித்து கோவில்களுக்கோ சென்று வருவர் , அதேபோல நான் வருடத்திற்கு ஒரு முறை சில புத்தகங்களை வாசிப்பதும் சில படங்களை பார்ப்பதும் உண்டு , அதில் ஒரு படம் " Life of Pi " . 

நம் ஆன்மாவை கழுவி நம் மனதிற்கு ஒருவித பேரலையை தரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று .

நாவல் வெளிவந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பின் படமாக்கப்பட்டது . அந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது தற்போது . படம் ஏற்படுத்தியதைவிட புத்தகம் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது . ஆழ்ந்த மயான மன அமைதிக்கு மனதை அழைத்துச் செல்கிறது , உணர்வுகளை வெளிப்படுத்த தெரியவில்லை . 

20 நாட்களில் வாசித்து வாழ்ந்ததற்கே இப்படி என்றால் , 220 நாட்களுக்கு மேல் கடலில் மழைத்துளியின் அணுவைக் கூட ரசித்து வாழ்ந்த படேலின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ?

படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இது கற்பனைக் கதைதானா என நினைத்து சந்தேகம் கொண்டேன். நாவலை வாசிக்கத் தொடங்கிய பின்பு தான் தெரிந்தது இது முற்றிலும் உண்மை கதை என்று .

கனடாவிலிருந்து நல்ல கதையை தேடி இந்தியாவிற்கு பயணப்பட்டு வந்த யான்மார்ட்டேல் , பாண்டிச்சேரியில் ஒரு டீ கடையில் ஒரு முதியவரின் கூற்றில் ஒரு வரியை கேட்டு மயங்கி  , நல்ல கதை கிடைக்குமென நம்பி பை படேல் - ஐ தேடி இந்தியாவிலிருந்து கனடாவிற்கு சென்றார் ஆனால் கிடைத்ததோ ஆன்மாவை குளிர்விக்கும் அற்புத காவியம் .


முதியவரின் கூற்று " பை படேல் -ன் கதை உங்களுக்கு கடவுள் நம்பிக்கையை அளிக்கும் " என்பது . 

இந்த நாவல் எனக்கு கடவுள் நம்பிக்கையை  அளித்ததோ இல்லையோ இயற்கையின் மீது இருந்த தீராத காதலை மேலும் தீவிரப்படுத்தியது .

இயற்கையின் மாயையை புரிந்து கொள்ளவோ ,உணர்ந்துகொள்ளவோ இயலும் பக்குவம் எவருக்கும் உண்டோ ?


நீலக் கடலும் , பரந்த வானமும் , வங்கப் புலியும் , படேலின் போராட்டமும் , ஏதோ செய்து கொண்டே இருக்கிறது மனதை .

தாயுமானவர் கூற்று உண்மைதானோ என தோன்றியது இந் நாவல் வாசிக்கும் போது  ‘எல்லாம் எண்ணுகையில் உண்பதும் உறங்குவதுமாய் முடியும் ‘ .


புத்தகத்தில் இருந்து -

 ' வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் தேய்மானம் அடையும் போது, மக்கள் புலம் பெயர்கிறார்கள். எவ்வளவு கடினமாகப் பாடுபட்ட போதிலும் பட்டபாட்டிற்கு ஏற்ற பலனில்லையே என்கிற அரிப்பு மனிதனைத் தின்னத் துவங்கிவிடும். ஆண்டு முழுவதும் பட்ட பாட்டின் பலனை புறச்சூழல் ஒரே நாளில் நாசமாக்கிவிடும். எதிர்காலம் இருண்டு தோன்றும் போதும், தாம் எப்படியோ காலத்தை ஓட்டிவிடலாம், நமது பிள்ளைகளின் கதி என்ன என்கிற எண்ணம் துரத்தும் போதும், மாற்றம் என்பது மாறாதது என்பது பொது விதியாக இருந்தாலும் இந்த நிலை மாறுவதற்கான சாத்தியக் கூறு தென்படவே இல்லையே என்கிற கையற்ற நிலையிலும், நமக்கு மகிழ்ச்சியும் வளமும் இங்கில்லை வேறெங்காவது இருக்கும் என்கிற எண்ணம் உந்தும் போதும் மக்கள் புலம் பெயர்கின்றனர். '





நாவல் எழுதிய "யான் மார்ட்டெல் "அவர்களுக்கும், தமிழில் மொழிபெயர்த்த "சின்னத்தம்பி முருகேசன் "அவர்களுக்கும் ,நாவல் வெளிவந்து 11 ஆண்டுகளுக்குப் பின் திரைப்படமாக இயக்கிய "ஆங் லீ "அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் .


நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்தது , திரைபடத்திற்கு 4 ஆஸ்கர் விருது கிடைத்தது . இந்த விருதுகளை விட பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது தான் பெரிய விருது .

இயற்கை தன்னை ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு வகையில் வெளிகாட்டிக் கொண்டே இருக்கிறது . உடன் பயணிக்கும் பயணியான வங்கப்புலியின் கண்களில் அதன் ஆன்மாவை உணருகிறான் . அதிகாலை சூரியனின் மஞ்சள் வெயில்  ரிச்சர்ட் பார்க்கரின் (புலி) மஞ்சள் உரோமத்திற்கு வர்ணம் தீட்டுவதாக எண்ணி சிலிர்க்கிறான் .


இயற்கையே அனைத்திற்கும் காரணம்  கப்பலில் பயணித்த பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியதும் , படேல் - ஐ காப்பாற்றியதும் .

மூன்று மதங்களையும் பின்பற்றும் படேல் , ஒரு நிலையில் தன்னையே கடவுளாக உணருகிறான் .

அந்த இளைஞனின் மனமும் என் மனமும்  பல இடங்களில் இணைந்தே இருக்கிறது . 

புத்தகத்தில் இருந்து சில வரிகள் -

         '   முக்தி அடைவதைத் தவிர மிகப்பெரிய விருப்பம் என்று ஏதேனும் இருக்குமானால் அது புத்தகம் படிப்பது தான் முடிவடையாமல் வளரும் நீண்ட கதையைக் கொண்ட பெரிய புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டி ஒவ்வொரு முறையும் புதிய, புதிய பார்வையையும், புரிதலையும் உருவாக்கக் கூடியதாக இருப்பின் சாலச் சிறந்தது. ஐயோ! படகில் ஒரு புனித நூல் கூட இல்லையே! உடைந்து நொறுங்கிய தேரில் அருளுரை நல்க கிருஷ்ணனும் இல்லாமல் தேற்றுவாரற்றுப் போன அர்சுனனானேன்' .





இந் நாவல் மூலம் பெற்ற உணர்வுகளை வரிகளில் எழுத விரும்பவில்லை , இதை நீங்கள் என் சுயநலம் என கூட நினைத்துக் கொள்ளுங்கள் ஆனால் வாழ்வில் ஒரு முறையாவது தொடுக மனதால் , 'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தையோ, அல்லது நாவலையோ .


வாசித்தல் ஒரு தவம் , அதில் கிடைக்கும் உணர்வுகளும் அனுபவங்களும் வரம் . கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் , வானளவு புகழ் , சொத்து சேர்த்தாலும், இந்த வரம் கிடைப்பது அரிதினும் அரிது .
















 

Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்