மருதநாயகம் - நாவல் வாசிப்பு அனுபவம்

 மருதநாயகம் - நாவல் வாசிப்பு அனுபவம்






அனைவரையும் போலவே நானும் அறிந்திருந்தேன் , இந்த பெயருக்கு பின் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கும் என துளியும் நினைத்தது கிடையாது.
   39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த "கான்சாகிப் முகம்மது யூசுப் கான் மருதநாயகம்" -ன் வரலாறு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  
சாத்தியம் இல்லாத சாதனைகள் படைத்த இவரின் பிறப்பு குறித்து பல தரப்பட்ட கருத்துக்களும் கதைகளும் நிலவுகிறது.
மரணம் அடைந்து இரண்டு வாரங்களுக்குப்பின் இவரைப் பற்றி ஒரு ஆங்கிலேயர் எழுதிய கடிதத்தில், "மருதநாயகம்" பாரம்பரிய பாண்டிய வம்சாழியை சார்ந்தவர் என்றும், மற்றொரு கடிதத்தில் கிருஸ்த்தவ தாய்க்கும், இஸ்லாமிய தந்தைக்கும் பிறந்தவர் என்றும், 1990களில் செய்த ஆய்வில் மருதநாயகம் வேளாலர் குலத்தைச் சார்ந்தவர் என்றும், ஏழை இஸ்லாமிய தையல்கார தந்தைக்கு பிறந்தவர் என்றும், பல கதைகள் உலாவுகின்றன. 
              பிறப்பா ஒரு மனிதனை தீர்மானிக்கிறது? செய்த செயல்தானே முக்கியம் ? இவரின் பிறப்பை விட்டு வரலாற்றை பார்த்தால் ஒரு சாகச வீரனின் துணிவை பெறலாம் நாம்.




போர் வீரர், கணக்காளர், மொழிபெயர்ப்பாளர், படைத்தளபதி, ஆளுநர், மதுரை சுல்தான் என இவரது படிப்படியான முன்னேற்றம் நம்மையும் உற்சாகப்படுத்துகிறது.

        ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல் ஆற்றியதாலும், பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்ததாலும் பல பாளையக்காரர்களை ஆங்கிலேய அரசுக்கு அடி பணிய வைத்ததாலும், தேசத்துரோகி, கொடியவன், இரத்த வெறி பிடித்த அரக்கன் என்று என்னால் ஒதுக்கி வைக்க இயலவில்லை, காரணம் இறுதியில் கூறுகிறேன்.

    தோல்வியை சந்திக்காத யூசுப் கான் - ஐ முதன் முதலில் தோற்கடித்தவர் 'பூலித்தேவர்' . தமிழகத்தின் மிக முக்கியமான பாளையக்காரர்.

சிறு வயது முதல் எனக்கு ஒரு சந்தேகம் மற்றும் நகைச்சுவை "ஏன் இவரை மட்டும் 'மாவீரன் பூலித்தேவன்' என்று அழைக்கிறார்கள் என்று .

        மூன்று முறை ஆங்கிலேயர்களை தோற்கடித்தவர், வெறும் 2000 படை வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு கையில் ஆயுதமோ, வேல்கம்பு, வளரி, வாள், வீச்சறிவாள் மட்டுமே. ஆனால் எதிர் படையிலோ 10,000 கவச உடை அணிந்த வீரர்கள், குதிரைப்படை, துப்பாகிகள், 8 பவுண்ட் எடை கொண்ட 6 பீரங்கிகள், 16 பவுண்ட் எடை கொண்ட 2 பீரங்கிகள் ,மருத்துவர்கள் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். எவ்வளவு துணிச்சல் எப்படிப்பட்ட போர் முறை இவரை "மாவீரன் பூலித்தேவன்" என அழைப்பத்தில் தவறில்லை தானே?

( 1767 வாசுதேவநல்லூர்க் கோட்டையைப் பிடிக்க ஆங்கிலேய தளபதி டொனால்டு கேம்பல் என்பவர் வந்தார். அப்போதும் பூலித் தேவரின் வீரர்கள் ஒரு பாணியில் கோட்டையைப் பாதுகாத்தனர். அவர்களது வீரம் குறித்து ஆங்கிலேயக் கவுன்சிலுக்கு டொனால்டு கேம்பல் எழுதிய கடிதத்தில், “உயிரைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் போரிட்ட பூலித்தேவர் வீரர்களின் மன உறுதி நம்பமுடியாத வகையில் இருந்தது. பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியபோது, ஆங்காங்கே ஏற்பட்ட சேதத்தை, அந்த நாட்டு வீரர்கள் உடனடியாகப் பனை மரங்களைக் கொண்டும், வைக்கோல்களைக் கொண்டும் சரி செய்தபடி இருந்தனர். மிக அருகில் தங்கள் படைவீரர்கள் பீரங்கியால் சுடப்பட்டு உடல் சிதறினாலும், அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், அந்த வீரர்கள் கோட்டைச் சுவரை செப்பனிடுவதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள். இந்த வீரர்கள். ஆங்கிலேயர்களின் மிகச்சிறந்த வீரர்களைக் கட்டிலும் எவ்வளவோ மேம்பட்டு இருந்தனர்" என்று புகழ்ந்து இருந்தார்.)

          பூலித்தேவரை பற்றி தனியாத எழுதலாம், கான்சாகிப் யூசுப் கான் கிட்டதட்ட தென் தமிழகத்தின் சுல்தானாக ஆட்சி செய்தவர் மக்கள் விரும்பும் வகையில் .

திருமலை நாயக்கர் கள்ளர்களுக்கு மதுரை காவல் பொறுப்பை வழங்கியது போல இவரும் காவல் காக்கும் உரிமையை வழங்கியதோடு அணிகலன்களும் உடைகளும் வழங்கி கௌரவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல தானங்களை வழங்கினார், அனைத்து மக்களையும் அவரவர் மதங்களை பின்பற்ற அனுமதித்தார்.

     தான் ஒரு இஸ்லாமியராக இருந்தும் அனைத்து ஆலய சடங்குகளிலும் கலந்து கொண்டார்.

     இவர் ஆட்சியில் இருக்கும் போது மக்கள் சுதந்திரமாக உணர்ந்தனர், மருதநாயகத்தை நேசித்தனர், மகன் பிறந்த அன்று பல பரிசுகள் வந்ததாக குறிப்பேடுகள் உள்ளன, இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி இவரை நண்பராக பாவித்தார்.

   மீனாட்சி அம்மன் கோவிலில் நரபலி கொடுக்கும் சடங்கு இருந்ததாகவும், தெற்கு வாசலின் அடியில் தோண்டி புதையல் எடுப்பதற்காக இவரது ஆட்சியில் நரபலி கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது. 

இவரைப் பற்றி 'கான்சாகிபு சண்டை' என்ற பழங்கால நாட்டுப்புற பாடல் தொகுப்பு உள்ளது. இதைப் படித்தப்பின்பு தான் கமல்ஹாசனுக்கு 'மருதநாயகம்' படம் எடுக்கத் தோன்றியிருக்க வேண்டும்




ஆங்கிலேயர்களின் கீழ் நல்ல பெயருடன், பெரிய பதவியில் ஆட்சி செய்து வந்த மருதநாயகம் ஏன் அவர்களுக்கு எதிராக திரும்பினார் என்பது பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை.

ஏமாற்றத்தாலும், வஞ்சகத்தாலும் ஆங்கிலேயர்க்கு எதிராக தன் படையை திரட்டினார் மருதநாயகம்.

       இவரது ஆட்சியில் இவரை நேசித்த மக்களின் ஆதரவில் ஆங்கிலேயர்க்கு எதிராக போரை நடத்தினார்.

இவரின் மேல் உள்ள பாசத்தால் பல ஊர்களின் பெயர்கள் இவர் பெயரை தாங்கி நிற்கின்றன இன்று வரை, நாம் அறியாமலேயே.

 ( மதுரை தெற்கு மாசி வீதிக்கும், தெற்கு வெளி வீதிக்கும் இடையே உள்ள பகுதி 'கான்சா மேட்டுத் தெரு' என்று அழைக்கப்படுகிறது.

மதுரையில் கீழவெளி வீதி இராமநாதபுரம் ரோடு அருகே இருக்கும் பகுதியின் பெயர் 'கான்பாளையம்'.

மதுரை திருமங்கலம், விருதுநகர், எட்டயபுரம் ஆகிய இடங்களில் 'கான்சாபுரம்' என்ற இடங்கள் இருக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புப் பகுதியிலும், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைப் பகுதியிலும் 'கான்சா புரம்' என்ற இடங்கள் உள்ளன.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே 'குமந்தாபுரம்’ என்ற இடம், கமாண்டர் பதவி பெற்ற யூசுப்கான்" பெயரை சொல்லிக்கொண்டு இருக்கிறது.

அம்பாசமுத்திரம் அருகே யூசுப்கான் கட்டிய 'நதியுண்ணி தடுப்பணை இப்போதும் செயல்பாட்டில் உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 'முகம்மது கான்சாகிப் புரம்" என்று அழைக்கப்பட்ட இடம் இப்போது, 'மம்சாபுரம்' என்ற பெயரைத் தாங்கி இருக்கிறது.

நெற்கட்டான்செவலுக்குத் தெற்கே இருக்கும் மேடு'கான்சாமேடு' என்ற பெயரைப் பெற்று இருக்கிறது. )

    மருதநாயக்கதோடு செய்யப்பட்ட ஒரு போரில் 12 லட்சம் டாலர் செலவு செய்யப்பட்டதாக குறிப்பு உள்ளது, இன்றைய மாதிப்பு ?

      மருதநாயகத்தை தெரியப்படுத்திய கமல்ஹாசனுக்கும், பல ஆராய்சிகள் செய்து, பல தகவல்களை சேகரித்து, கதையாகவும், ஆய்வுக் கட்டுரையாகவும் வழங்கிய அமுதனுக்கும் தமிழகம் கடமைப்பட்டுள்ளது.


" கான்சாகிபு சண்டை " என்ற நாட்டுப்புற பாடலின் இறுதிப் பாடல்

வாழ்த்து

கான் சாயபு கதை தன்னைப் படிக்க செய்த கர்ம வினைகள் காதவழி யோட

மாத மும்மாரி மழை பொழிய

 இந்த மண்டலத்தின் மன்னவர்கள் செங்கோல் தழைக்க

நேசமுடன் கான் சாயபு கதையை நீனிலத் தன்னிலே நித்தம் படிப்போர் தேசம் திலதிக நாளிருந்து இந்த சீமானெனப் பெருகிச் செல்வந் தழைக்க

 பாண்டியன் மகள் மீனாளைப் போல அதிக பாக்கிய மென்மேலும் பெருகி யுண்டாக

 திருப்பதி மலை ரங்கர் வாழி

நல்ல சீதா பிராட்டியுடன் உமையவளும் வாழி

தென் மதுரைச் சொக்கையர் வாழி எங்கள் தேன்மீனாள் கயற் கண்ணியும் வாழி

மயிலேறு வேல் முருகா வாழி குற வள்ளிதெய்வானை யுடன் மலர்மகளும் வாழி


"மருதநாயகம் " மறைக்கப் பட்ட , மறைக்கபடும் வரலாற்று நாயகன் , அவரை அறிவதின் அவசியம் என்ன என்பதை வாசித்தால் புரியும் .


                                 - நந்தா




Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்