விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

        

சிறு மாற்றத்துக்காக வெண்முரசில் இருந்து கொண்டு மூச்சு வாங்குவதற்க்காக கையில் எடுத்த புத்தகம் " விண்ணளந்த சிறகு " . இயற்கை சார்ந்த சிறிய புத்தகம் ஆனால் மிகப்பெரிய உலகை காட்டும் விரிவான புத்தகம். நாற்பது ஆண்டுகள் தேடல் கொண்ட,  நூற்றி பதினைந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகம் . இயற்க்கை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் .   





நாடு  என்பது மக்களால் மட்டும் ஆனது அல்ல , அதில் ஓடும் ஆறுகள் , மலைகள் ,ஓடைகள் ,காடுகள் ,அங்கு வளரும் தாவரங்கள் ,காட்டுயிர்கள் , சிற்றுயிர்கள் , இவை அனைத்துமே ஒரு நாட்டின் முழு பரிணாமம் . ஓடி ஓடி பொருள் சேகரிக்கும் அவசரத்தில் இதையெல்லாம் மறந்து இருப்பது மனிதர்களின் அறிவின்மை .

பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல் , " நிஸகாந்தி " என்ற ஒரு பூச்செடி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் இரவில் இரண்டு மணி நேரம் மட்டும் பூப்பதாகவும் , புத்தபூர்ணிமா நாளில் பூப்பது , என என்னை வியப்பில் ஆழ்த்தியது அதன் தகவல்கள்  . இந்த செடியை எழுத்தாளர் தன் வீட்டீலேயே வளர்த்து பார்த்து இயற்கையின் பூரண தரிசனத்தை அனுபவித்துள்ளார் .  

தொதுவர் பழங்குடி இன மக்களின் நலனுக்காக போராடிய பில்ஜின் என்பவரின் போராட்டம் போற்றுதலுக்குரியது , ஆதரவற்ற ஒன்பது தொதுவர் இன குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார் அவர்களில் ஒருவர் ' சோலைகிளி' என்ற படத்தில் நடித்த ராகினி , அவர் நடிகர் கார்த்திக்-ஐ  காதலித்து திருமணம்  செய்து கொண்டார் அவர்களின் புதல்வன் தற்போதைய இளம் நடிகர் " கௌதம் கார்த்திக் " .என்ற செய்தியும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது .

உலகில் முப்பத்தி ஐந்து மனிதர்களுக்கு ஒரு நாய் என்ற விகிதத்தில் நாய்களின் பெருக்கத்தால் மற்ற விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை வாசிக்கும் பொது திடுக்கிடுகிறது .




இதில் உள்ள 35 கட்டுரைகளும் மிக முக்கியமானவை கூறியவை , கட்டுரை என்பதை தாண்டி நாவல் தன்மை கொண்டவை . மிகுந்த வருத்தம் தர கூடிய செய்திகள் அதிகம் இருந்தாலும் நம் மனதை வருடக்கூடிய தகவல்கள் சிலிர்க்க வைக்கின்றன .உலகம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல , வயது முதிர்ந்த மரத்தை வெட்டுவதால்  நாம் இழப்பவையை விட மற்ற உயிரினங்கள் இழப்பவை மிக அதிகம்.

எங்கள் வீட்டின் அருகில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. என் பள்ளி, கல்லூரி நாட்களில் தினமும் அந்த மரத்துடன் பேசாமல் இருந்த நாட்களே இல்லை. காலையிலும் மாலையிலும் அந்த மரத்தை இல்லமாக கொண்ட பல பறவைகளின் இனிமையான இரைச்சல் செவி வழியே நம்மை திகட்ட வைக்கும்,. நான் பல முடிவுகளை அந்த மரத்திடம் கேட்டு முடிவு செய்துள்ளேன், அந்த நினைவுகள் நீங்காதவை மனதை விட்டு. பல புகைப்படங்கள் அதோடு நான் எடுத்துள்ளேன். பல நூறு உயிர்களுக்கு இருப்பிடமான அந்த மரம் எனக்கும் உற்ற நண்பன்.


ஒரு முறை அதன் கிளைகள் அனைத்தும் வெட்டப்பட்டு வெறும் கொப்பாக காட்சி அளித்தத்தது என் மனதை நோகடித்தது.அவர்கள் வெட்டியது பல நூறு உயிர்களின் வாழ்விடத்தை.


என் அணைத்து குறும்படங்களிலும் அந்தமரத்தை காட்சி படுத்தி இருப்பேன்.
அருகில் இருக்கும் கோவில் ஊருக்கு என்ன செய்கிறது என தெரியவில்லை ஆனால் அதை விட பலமடங்கு அந்த மரம் நன்மைகள் செய்தது அணைத்து உயிர்களுக்கும். நம்பவில்லை என்றால் " அரசமரத்தின் நன்மைகள் என்ன? " என்று தேடிப்படித்து பாருங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

              


அந்த மரம் இருந்த இடத்தில் இப்போது சிமெண்ட்கல் பதிக்கப்பட்டு நடைபாதையாக உள்ளது,.அவ்விடம் என்னை பொறுத்த அளவில் உலகுக்கு நன்மைகள் பல புரிந்து,பயன் அடைந்தவர்கலாளேயே கொள்ளப்பட்ட ஒரு அரசமரத்தின் சமாதி.
ஒவ்வொரு முறை அதை கடந்து செல்லும் போதும் நினைவஞ்சலி செலுத்துகிறேன். அதன் மீது நடக்க நேரும் போது உன் அழிவை என்னாலும் தடுக்க இயலவில்லையே என எண்ணி மனம் கூசுகிறது,.


நமது காலத்தில் வாழ்வின் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் ஜீவனற்ற, செயற்கையான உபகரணங்களைத்தா ன் அதிகமாகக் கையாளுகிறார்கள். அவை அழகற்றவை மட்டுமல்ல. பரவசத்தையும் மரியாதையையும் தூண்டுபவை அல்ல. பெருவாரியான மக்கள் நகரங்களுள் அடைபட்டு வாழ்கிறார்கள். ஆகவே இயற்கையிடமிருந்து அந்நியப்பட்டு, அதை நேசிக்க முடியாமல் இருக்கிறார்கள். இயற்கையுடன் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாததால், புறவுலகை எதிர்கொள்ளும் இயல்பை இழந்துவிடுகிறார்கள். சிறுவயது முதலே இயற்கையுடனும், மற்ற உயிர்களுடன் தொடர்புகொண்டிருக்கும் மக்கள் மனநிறைவுடனும் நிம்மதியாகவும் வாழ முடிகிறது . இசை. இலக்கியம், கலை போன்ற மற்ற துறைகளிலும் அவர்கள் நுண்ணுணர்வுடன் ஈடுபாடு கொண்டிருப்பதைக் காணலாம்.


ஆர்கிட் என்ற மலரை தேடிய ஆசிரியரின்  பயணம், 42 ஆண்டுகளுக்குப் பின் அதை கண்டது , குற்றாலத்தில் அவர் கண்ட சாதுவின் கதை , தன்னுடைய தேன் நிலவில் இசையாக நிறைந்த பறவையின் கதை , ஆசிரியரின் மீசையின் காரணம், என ஒவ்வொரு கட்டுரையும் நம்மை நாவல் வாசிப்பது போல் மெய் மறக்க செய்கிறது .

இப்புத்தகத்தை பற்றி அனைத்தையும் கூற விரும்பவில்லை, வாசித்து அனுபவியுங்கள்.

ஆசிரியர் சு. தியாடோர் பாஸ்கரன் அவர்களை வணங்குகிறேன், நன்றி.



        இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கட்டுரைகள் எழுதவில்லை காரணம் வெண்முரசு என்ற மாபெரும் வேள்வியை செய்து  வருகிறேன் ,இருபத்தி ஆறு புத்தகங்கள், இருபத்தி ஆறாயிரம் பக்கங்களுக்கும்  மேல்  வாசித்து முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் என நினைக்கிறேன் , ஐந்து புத்தகங்கள் நிறைவு பெற்றது, ஆறாவது புத்தகத்திற்கு முன் இதை வாசித்தேன். அதை பற்றி தனியாக ஒரு தொகுப்பு எழுதுகிறேன் விரைவில்   . 


                            



  " விண்ணளந்த சிறகு " வாசிப்பு எனக்குள் இதனால் வரை இருந்த இயற்க்கையின் காதலை அதிகப் படுத்தியது , இனி என்னால் எந்த ஒரு உயிரையும் வேறு ஒரு அக கண்ணால் பார்க்க முடியும் . நட்சத்திரத்தை பார்த்து தூங்கிய நாட்களை மீண்டும் நாடுகிறேன் . நிலவு வெளிச்சத்தில் நடந்து பழகிய உடலை மீண்டும் விரும்புகிறேன் . 



                                 - நந்தா 






                                                                                                                                  



Comments

Popular posts from this blog

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்