உருமாற்றம் - நாவல் வாசிப்பு அனுபவம்

 



நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃபிரான்ஸ் காஃப்கா , ஆஸ்திரிய நாட்டு எழுத்தாளர் , சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் .

மனிதச் சீரழிவையும் , வாழ்வின் கொடூரங்களையும் , அவரது பாணியில் எழுத்தாக மாற்றி பல உன்னத படைப்புகளை இவ்வுலகத்திற்கு தந்தவர் . 

இவரது எழுத்தின் பாதிப்பு கொண்ட  எழுத்தாளர்கள் இன்றும் உள்ளனர் . 

இவரது படைப்புகளை சாதாரணமாக வாசிக்க இயலாது . வாழ்வின் சிக்கல்களை , பல்வேறு பட்ட மனித உளகிளர்ச்சிகளை ,மிக ஆழமான நுட்பத்துடன் கதைப்படுத்தி இருப்பார் .

 - உருமாற்றம் 

- சீனாவின் நெடுஞ்சுவர் 

- ஒரு நாயின் ஆராய்ச்சி 

- வளை

 - தண்டனைக் குடியிருப்பில்

 - இராட்சத மூஞ்சுறு 

                                      என்ற 6 சிறுகதை தொகுப்பே இந்த புத்தகம் .

                      07-12-2022 -ல்  வாசிக்க ஆரம்பித்து 27-12-2022 -ல் நிறைவு பெற்றது. 

240 பக்கம் வாசிக்க ஏன் 20 நாள் எடுத்து கொண்டேன் என்றால் , வெறுமனே வாசித்து மட்டும்  முடிக்க கூடிய நாவல் வகையை சார்ந்தது அல்ல இது .  மன ஆய்வும் உள் உணர்வு சோதனைகளையும்  இந்நாவல் செய்கிறது நம்முள்.


இவரது சொந்த அனுபவங்களையும் ,அக்காலய அரசியல் சூழ்நிலைகளில் மக்களின் மன நிலைகளையும் ,சேர்த்து , தொடர்பே இல்லாததது போல் கதைக்களம் அமைத்து விவரித்து எழுதி இருப்பார் . வாசித்து புரிந்து கொள்ளவே  நமக்கு ஒரு வித  உளநிலை  தேவைப்படும் போது , எழுதிய இவரை ?


                                                                                  

நனவிலி நிலை , அந்நியமாதல், உடல் மற்றும் உளரீதியான கொடூரம், ஒரு திகிலூட்டும் தேடலில் பாத்திரங்கள், மற்றும் மாய மாற்றங்கள் ஆகியவை காஃப்காவின் கதைகளில் வரும் பிற முக்கிய கருப்பொருள்கள் ஆகும். 

ஆதிக்க அதிகாரம் கொண்ட உலகில் கவலைகளுக்குட்பட்டு பாதிக்கப்படும் தனி மனிதர்களை பற்றியது இவருடைய எழுத்துக்கள்  .

திருமணம் செய்து கொள்ளாத இவர் , அதன் மீதுள்ள பயம் தான் காரணம் என்கிறார் . நாஸி வதை முகாமில் அவரது குடும்பத்தினர் கொள்ளப்பட்டனர் , அதன் மூலம் ஏற்பட்ட மன பாதிப்பிற்கு எழுத்தில் மருந்தை தேடிக்கொண்டார் , 12 மணி நேர வேலையில் எழுத, படிக்க நேரம் கிடைக்காததால்  அவ்வேலையை ராஜினாமா செய்து விட்டு குறைந்த நேரம் கொண்ட வேலையை தேடிக்கொண்டார் . 

சிக்மண்ட் பிராய்ட் - ன் கொள்கைகளை  புரிந்து கொண்டவர்களுக்கு இவரது எழுத்துக்கள் இனிமையாக இருக்கும் , மற்றவர்களுக்கு எரிச்சலையம் மன குழப்பத்தையும் ஏற்படுத்தி விடும் ,என எனக்கு தோன்றுகிறது { என் அனுபவம்    } . சிக்மண்ட் பிராய்ட் - ஐ படித்து விட்டு இவரது எழுத்துக்கு வருவது நல்லது .




ஒவ்வொரு அறிவார்ந்த மனிதனும் கண்டிப்பாக பிராய்டின் தத்துவங்களையும் ஆராய்ச்சிகளையும் ஓரளவாவது படித்து புரிந்து கொள்ள வேண்டும் . மகாபாரதப் போரில் முதல் களப்பலி இடப்பட்ட அறவான் போலவே எதிர் ரோமங்கள் கொண்ட இவர் பிறந்த போதே அனைவரையும் ஆச்சரியப் படுத்தினார் .

பிராய்ட்-ஐ புரிந்து கொள்வது அனைவராலும் இயலாத ஒன்று , அவரது தத்துவங்கள் மிக நேர்தியானவை , அறிவியல் பூர்வமானவை , உணரத்தான் முடியும் புரிந்து கொண்டாலும் வெளியில் சொல்வது சற்று கடினம் .

பகவத் கீதையில் கிருஷ்ணன் மனிதர்களை மூன்று விதமாக பிரித்தது போல் { சாத்வீக குணம் , ரஜோ குணம் , தமோ குணம் } , பிராய்டு  மனிதர்களைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் செய்து பல கருத்துக்களையும் பல தத்துவங்களையும் நமக்கு அளித்துள்ளார் .

பகவத்கீதையோடு ஒப்பிட்டு எழுதியதற்கு  , காரணம் என்னவெனில் , பகவத்கீதையை 1000 தில் ஒருவரால் தான்  உணரவும் புரிந்து கொள்ளவும் முடியும் , மற்றவர்கள் வாசிக்கலாம் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கலாம் , இவை மதிப்பெண் பெறுவதற்கு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் செய்வது ,  பகவத்கீதை சாதாரண மனிதர்களால் உணரப்படுவது மிக அரிது . அதற்க்கு நீண்ட தேடலும் உள  பயிற்சியும் தேவை , பக்தியையும் தாண்டிய ஒன்று . 

பிராய்டின் கொள்கைகளும் எளிதில் அறிய சிக்கலானவை , பரந்த மனப்பாங்கு வேண்டும் .

அறிதலுக்காக  தன் அகம் அழித்து , ஆர்வமும் தாகமும் கொண்டவர்களுக்கு எதுவுமே சாத்தியம் . 

பல வகையான மன நோய்களும் அதற்கான காரணங்களும் , பிராயிடை படிக்கும்  போது அறிந்து கொண்டேன் , இனி எவரையும் எந்த செயலையும் என்னால்  சாதாரணமாக கடந்து செல்ல இயலாது எனத் தோன்றுகிறது பிராயிடை வாசித்த பின்பு . 

வாசிக்கும் போதே என்னை சுற்றி எவ்வளவு மனப்பிறழ்வு கொண்டவர்கள் சாதாரணமாக சுற்றி அலைகிறார்கள் என்பதை கண்டு வியந்தேன் , அவர் வகுத்த பல பிரிவில் நானும் ஒரு பிரிவில் இருப்பதை நினைத்து சிரித்தேன், { நல்ல மன நோய் தான் பிரச்சனை ஒன்றும் இல்லை }. 


உருமாற்றம் - கதை என் பார்வையில் பல திறப்புகளை ஏற்படுத்தியது ,

 1 . உழைத்து தேய்ந்து போன முதியவர்கள்  சமூகத்தாலும் பெற்றவர்களாலும் புறக்கணிக்கப் படுவது .

 2 .ஒரு குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக  உழைக்கும்   இளைஞன் ஏதோ பாதிப்பில் { விபத்து , உடல் கோளாறு } படுக்கையில் விழுந்து விட்டால் அவன் சந்திக்கும் பிரச்சனைகள் .

3 . உடல் கோளாறால் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சமூக பார்வைகள் .  இவை தான் கதையின் மைய்யம் ஆனால் இவரின் சிந்தனையில் ,

- ஒரு இளைஞன் தீடீரென்று கரப்பான் பூச்சியாக மாறி விடுகிறான் ,அப்போதிருந்து   குடும்பத்தில் அவன் மீதான பார்வைகள் வேறுபடுவதால்  அவனுள் எழும் எண்ண ஓட்டங்களின் வழியாக  கதை செல்கிறது . 

இப்போது மேற்சொன்ன மூன்றையும் இணைத்துப் பாருங்கள் ஓரளவுக்குப்  புரியும் .


ஆரம்பத்தில் நாமும் அந்த கரப்பான் பூச்சியை வெறுக்கிறோம் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதன் மீது அன்பை பொழிகிறோம் , இதுவே காஃப்கா வின் வெற்றி ...


               ஒரு கட்டிட பொறியாளனாக எனக்கு அதன் மீது எனக்கு மிகுந்த காதல் எப்போதும் உண்டு , எந்த ஒரு ஒரு கட்டிடம் எழுப்பும் போதும் பல பிரச்சனைகள் எழும் அதில் மிக நுண்ணிய ஒன்று கட்டிடம் அமையும் இடத்தை சுற்றி உள்ள மக்களின் மனநிலை, மனமாற்றங்கள் .


                        



                  காவல் கோட்டம் நாவலில்  படித்து  பிரமித்த செய்திகளில் ஒன்று மதுரையில் திருமலை நாயக்கர் மகாலின் வடக்கு பகுதியில் அமைந்த பத்து தூண்களுக்கு கிழக்கே ஒரு நுழைவாயில் இருந்திருக்கிறது. அதற்கான மதில் 274 மீட்டர் நீளமும், 183 மீட்டர் அகலமும், 12 மீட்டர் உயரமும் கொண்டதாய் விளங்கியது. 1837- ஆம் ஆண்டு சில அரசியல் காரணங்களுக்காகவும் போக்குவரத்து வசதிக்காகவும் இடிக்கப் பட்டது , அந்த சுவர்களில் பல குலதெய்வங்களின் சிலைகள் இருந்ததாகவும் , அதை இடிக்க பெரிய சூழ்ச்சி செய்து அந்த மக்களாலேயே அது இடிக்கப் பட்டது , ஒவ்வொரு சிலையும் சடங்கு சம்பிரதாயங்கள் செய்து அகற்றப்  பட்டன .

அகற்றப் பட்டது சிலைகளும் சுவர்களும் மட்டுமே , மக்களின் மன துக்கங்களை அல்ல . அப்போதிருந்த மக்களின் மனதுயரை மிக விரிவாக சு.வெங்கடேசன் பதிவு செய்திருப்பார் . 




கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலில் வைகை அணை கட்டப்பட்டதால் மூழ்கிப்போன 10 கிராமங்களின் கொண்டாட்ட வாழ்க்கையும் துயர நினைவுகளும் நம்மை ஆற்றுப்படுத்தும் . 

தான் பிறந்த ஊரை பார்க்க வேண்டும் என்றால் பல மணி நேரம் மூச்சடக்கி நீருக்குள் சென்று பார்க்க வேண்டும் என கண்ணில் ஈரத்துடன் இன்றும் நினைவு கூறும் வைரமுத்து , எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம்  ஒன்று போதும் தமிழ் உள்ளவரை அழியாது அந்த கிராம மனிதர்களின் கதைகள் . 

சொந்த ஊரை விட்டு வெளியேற மனம் இல்லாமல் வைகை நதியின் முதல் நீர்பெருக்கிலேயே பெரும் சுமையோடு மூழ்கி உயிரை விடும் பேயத்தேவரை நினைத்து இப்போதும் என் கண்ணிலும் நீர் சுரக்கிறது .  








                                      ஏன் இந்த இரண்டு சம்பவங்களையும் நினைவு கூறுகிறேன் என்றால் இவை போலவே சீனப் பெருஞ்சுவர் கட்டும் போது அங்கு இருந்த அரசியல் சூழ்நிலைகள் , மக்களின் மன நிலைகள் , கட்டிட தொழிலார்களின் எண்ணங்கள் , அவர்களின் மீது மக்களுக்கு இருந்த மரியாதையும் அன்பும் , கட்டிய விதம் என ஒவ்வொரு தகவலும் வியக்க வைக்கிறது , சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் ஏற்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பு நகைப்புக்குரியது இருந்தும் பெருஞ்சாதனை புரிய அனைத்தும் தேவை .

காவல் வீரர்கள் மட்டும் 10 லட்சம் , கட்டி முடிக்கப்படும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் அதிகம் , 6400 கிலோ மீட்டரை தாண்டி செல்கிறது அதன் நீளம் .

அப்போதைய மக்களின் எண்ணங்களும் செயல்களும் நம்மை ஆச்சரிய படுத்துகிறது . 





ஒரு நாயின் ஆராய்ச்சி - உண்மையிலேயே ஒரு நாய் இவ்வளவு நுட்பத்துடன் சிந்திக்குமா என்ற ஆச்சரியம் எனக்கு இல்லை , அதை விட , இவ்வளவு நுண்ணுணர்வுடன் இப்படி ஒரு கதையை ஒரு எழுத்தாளானால் சிந்திக்க முடியுமா என்ற ஆச்சரியம் தான் ஏற்பட்டது .




' கோமுப்பாட்டியும் சுப்ரமணியும் ' என்று என்னுடைய இரண்டாவது சிறு கதைக்கான ஆயத்தப் பணிகளில் இருந்தேன் ,  இக்கதை  நாயின் பல வித உணர்வுகளை  கற்று தந்தது , என்னால் இனி சுப்ரமணியின் எண்ணங்களை தெளிவாக எழுத முடியும் . சொல்லப்போனால் என் கதையின் ஆதியை  இதில் கண்டேன் . 

வளை  மற்றும் இராட்சத  மூஞ்சுறு  போன்ற கதைகளும் இதே வியப்பை கொடுக்கிறது நமக்கு . எழுத்தாளனிடம் மட்டும் அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு வகையில்  தங்கள் சுய சரிதையை கூறுகின்றனவோ ? 

இந்த நூற்றாண்டில்  புகைப்படங்களைப் பொருத்தி ஒவ்வொரு அரிய உயிரினங்களின் வாழ்க்கையை காண்கிறோம் தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் .  அக்காலத்தில் எப்படி இவ்வளவு நுட்பமான வாழ்க்கையை கற்பனை செய்து எழுத முடியும் அதுவும் பூமிக்கடியில் ஒளிந்து வாழும் உயிர்களை ? ஆச்சரியம் தான் . 

தண்டனை குடியிருப்பில் - இந்தக் கதை என்னுள் பல நுண்ணிய உணர்வுகளை தட்டி எழுப்பியது மெல்லிய உடல் நடுக்கமும் . ஜாலியன் வாலாபாக் படுகொலையை உங்களில் எத்தனை பேர் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்கள் ?

        பத்து நிமிடத்தில் 1650 குண்டுகள் ஓடி ஒழிய இடம் இல்லாமல் திரும்ப தாக்க ஆயுதம் இல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் . வரலாற்றின் பக்கங்களில் இதை போல், இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது ,  

 இயற்கையின் ஆற்றலால் பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர் ,உலகம் முழுக்க கொரனா காலத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வரை 77 லட்சத்தை நெருங்கி உள்ளது . 

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் கண் முன்னே ஒருவருக்கு மரண தண்டனை ஏதோ ஒரு வகையில் கொடுக்கப் பட்டால் கண் இமைக்காமல் கண்டு ரசிக்க இயலுமா அல்லது அதை செய்ய இயலுமா , அப்படி ஒரு நிகழ்வுக்கு பின் நிம்மதியாக இருக்க முடியுமா ? இப்படி பட்ட ஒரு கதை தான் தண்டனை குடியிருப்பில் . 

                    உருமாற்றம் - இந்தப் புத்தகம் நம்மை உருமாற்றும் சிந்தனையின் அடிப்படையில் , முடிந்தால் வாசித்துப் பாருங்கள் நேரம் இருந்தால் பயன் பெறுவீர்கள் . 
 

                     மனிதர்களை பற்றி திட்டவட்டமாக ஏதேனும் சொல்லக்கூடிய அளவுக்கு முதிர்ந்த மனிதர் யாரேனும் உண்டா இந்த பிரபஞ்சத்தில்? மனிதர்களிடையே வாழ்ந்து மனிதர்களைப் பார்க்குமளவு விலகி இருந்தவர்? 
 அப்படி எவரேனும் உண்டெனில் அந்த வரிசையில் பிராயிடும் ,காஃப்காவும் இருப்பார்கள் .           
                                                                                                            - நந்தா 





                                    


























 








            





Comments

Popular posts from this blog

விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்

முதல் சிறுகதை - இளங்காவல்

சு. வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்